×

சாட்சியங்களை பதிவு செய்ய நீதிமன்றங்களில் 3 மாதத்திற்குள் ஆடியோ-வீடியோ வசதி: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கொலை வழக்குகளில் தண்டனை மற்றும் விடுதலையை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்படும் மனுக்களை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு விசாரித்தனர். விசாரணையின் போது, பல குற்ற வழக்குகளில் சாட்சியங்களில் சிலர், பிறழ் சாட்சிகளாக மாறுவதால் விடுதலையாகின்றனர். இது தொடர்ந்தால், நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழக்க நேரிடும். எனவே, விசாரணையின்போது சாட்சியங்களை ஆடியோ - வீடியோ பதிவு செய்வது குறித்து விளக்கமளிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தனர். தொடர்ந்து பல வக்கீல்கள் ஆஜராகி, தங்கள் தரப்பு கருத்தை தெரிவித்தனர். அரசுத் தரப்பிலும், போலீஸ் தரப்பிலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், என்.ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவு: குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி நீதிமன்றங்களில் அனைத்து குற்ற வழக்குகளிலும், குறிப்பாக 10 ஆண்டு சிறைத்தண்டனை தரக்கூடிய வழக்குகளில் சாட்சியங்களை ஆடியோ -வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும். எனவே, மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மகளிர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட அமர்வு நீதிமன்றங்களில் சாட்சியங்களை பதிவு செய்ய ஆடியோ - வீடியோ வசதி இருக்க வேண்டும். இந்த நீதிமன்றங்களில் ஆடியோ - வீடியோ வசதி இருப்பதை 3 மாதத்திற்குள் தமிழக அரசு உறுதிபடுத்த வேண்டும். சாட்சிய பாதுகாப்பு திட்டத்தை முறையாக அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : Courts ,Icort Branch Directive ,High Court , High Court
× RELATED போதைப்பொருள் தடுப்பு தொடர்பான அரசின்...